யாழ் அமல மரித் தியாகிகளின் வடமாகாண நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தின் (CPR) முன்னெடுப்பில் கார்த்திகை மாத விசேட செயல் திட்டமாக 2000 பனை விதைகள் நாட்டும் நிகழ்வு 23/11/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு வலைப்பாடு கிராமத்தில் நடைபெற்றது. இப்பணியகத்தின் இயக்குனர் அருட்பணி S. J. ஜீவரட்ணம் அமதி அடிகளாரின் வழிகாட்டலில் இயற்கையோடு ஒன்றித்த தமிழர்களின் வாழ்வியல் பண்பாடுகளையும் கலாசாரத்தையும் எடுத்தியம்பும் ஓர் களமாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில் வலைப்பாடு பங்குத்தந்தை அருட்பணி எரோணியஸ் அடிக்களார் மற்றும் தூய அன்னம்மாள் ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஒத்துழைப்போடும் இந்த செயற்பாடு நடைபெற்றது. வட மாகாணத்தின் தனிப்பெரும் அடையாளமாய் நிமிர்ந்து நிற்கும் பனை மரங்கள் தமிழர்களின் வாழ்வில் தனிப்பெரும் பங்கை கொண்டிருக்கிறது. 
இதை நினைவூட்டவும் இவ்வளத்தை பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு முதலீடாக விட்டுச் செல்லவும் கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்தவும் இந்த செயல் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. "இயற்கை எமது பொது இல்லம்" எனும் கருப் பொருளோடு இளைஞர்களுக்கான கருத்தூட்டல் செயலமர்வும் நடைபெற்று பின்னர் உரிய அனுமதிகள் பெறப்பட்டு வலைப்பாடு கிராமத்தின் வெளிகளிலும் வீதியோரங்களிலும் பனை விதைகள் நாட்டப்பட்டன. இதில் ஏறக்குறைய 40 இளைஞர் யுவதிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், CPR பணியாளர்கள் என பலர் பங்கெடுத்திருந்தார்கள்









Post a Comment