மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு CPR-OMI ( JPIC)

கிளிநொச்சி obtect வளாகத்தில், நீதி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான பணியகத்தின் (CPR) முன்னெடுப்பில் மனித உரிமைகள் தொடர்பான பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது.


பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானத்திற்குத் தேவைப்படும் அடித்தளமாக மனித உரிமைகள் விளங்குகின்றன. இத்தகைய பயிலரங்குகள் வட மாகாண மக்களுக்கு மிக அவசியமானவை எனும் நோக்கோடு இந்நிகழ்வு, பணியகத்தின் இயக்குநர் அருட்பணி சூ. ஜே. ஜீவரட்ணம் (அ.ம. தி.) அடிகளாரின் தலைமையில், அமல மரித்தியாகிகளின் யாழ் மாகாண முதல்வர் உயர் அருட்திரு போல் ஜெயந்தன் பச்சேக் (அ.ம.தி) அவர்களின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற்றது.



அரச மற்றும் அரசசாரா நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள், உத்தியோகத்தர்கள், ஊக்குவிப்பாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இப்பயிலரங்கில் பங்கேற்று பயனடைந்தனர்.



குறிப்பாக, இலங்கையின் வட மாகாணத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் மனித உரிமைச் சவால்கள், போரின் பிந்தைய சமூகப் பிரச்சினைகள், நில உரிமை,வாழ்வாதார உரிமை,பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சட்டத்தின்முன் சமத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.






பயிலரங்கில் வளவாளர்களாக கலந்து கொண்ட சட்டத்தரணி திருமதி சரண்யா ராசுதன் அவர்கள். மனித உரிமைகள் குறித்த அடிப்படைக் கொள்கைகள், சர்வ தேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் அவற்றின் நடைமுறைச் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.


அதனைத் தொடர்ந்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளரான திரு. கனகராஜ் அவர்கள், வட மாகாணத்தில் பெறப்படும் மனித உரிமை முறைப்பாடுகள், அவற்றை அணுகும் நடைமுறைகள் மற்றும் பொதுமக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சேவைகளை எவ்வாறு பயனுள்ளவையாகப் பயன்படுத்தலாம் என்பதையும் எடுத்துரைத்தார்.


மேலும்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாண க்யூடெக் நிறுவனத்தின் இயக்குனர் அருட்பணி அன்றோ டேனிசியஸ் அவர்கள் நிகழ்வின் தார்ப்பரியம் குறித்து உரையாற்றினார்.

இறுதியில் பங்கு பற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

வீடியோவில் காண👇




0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post