அமைதியின் தூதர்களாக சிறுவர்களை ஊக்குவித்தது CPR – OMI (JPIC)

2025 ஆம் ஆண்டுக்கான சிறுவர் தினம்  "உலகை வழி நடாத்த - அன்பால் போஷியுங்கள்" எனும் கருப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகிறது. சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் சிறுவர் தினமானது மன்னார் இலுப்பைக்கடவை அந்தோனியார் புரத்தில் 2025.10.18 சனிக்கிழமையன்று கொண்டாடப்பட்டது.


நிகழ்வின் ஆரம்பத்தில் சிறுவர்களை பாதுகாக்கவும், சிறுவர் உரிமைகளை வலியுறுத்தவும்  அவர்களுக்கான கல்வி, பாதுகாப்பு முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தவும் விழிப்புணர்வு பேரணி இடம் பெற்றது.

இப்பேரணி மன்னார் யாழ்ப்பாண பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்டு    சிறுவர்கள்  தொடர்பான விழிப்புணர்வு பதாதைகளை தாங்கி சிறார்களும் பெற்றோர்களும் நடைபவனியாக அரங்க நிகழ்வுகள் இடம்பெற்ற அந்தோனியார் ஆலயத்தை வந்தடைந்திருந்தனர்.


 பேரணியில் சிறுவர்கள் குருக்கள், கன்னியாஸ்திரி, மருத்துவர், பொறியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு தொழில்வகைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேடங்களில் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் சிறுவர்களின் கனவுகளையும் இலக்கின்மீது கொண்ட அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி அமைந்திருந்தமை சிறப்பம்சமாகும்.


மேலும் பாடல், கவிதை, நடனங்கள், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் சிறுவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.


சிறுவர்களின் கனவுகளையும் திறமைகளையும் வெளிப்படுத்தி, ஒன்றிணைந்த வாழ்வு, பரஸ்பர மரியாதை மற்றும் சமூக ஒற்றுமையின் மதிப்புகளை ஊக்குவிப்பதை  நோக்கமாக கொண்டு நடைபெற்ற இச்சிறுவர் தின நிகழ்வில்   அமல மரி தியாகிகள் சபையின்  யாழ் மாகாண முதல்வர் உயர்அருட்பணி போல் ஜெயந்தன் பச்சேக் அமதி அவர்களும் அமல மரி  தியாகிகளின் யாழ் மாகாண நிதியாளர்,  மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் , அந்தோனியார் புர அபிவிருத்தி உத்தியோகத்தர், மன்னார் இலுப்பைக்கடவை மகா வித்தியாலயத்தின் அதிபர்,அந்தோனியார் புர பங்கு தந்தை சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் இளைஞர் மற்றும் மகளிர் அணியினர், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 அமைதி, நல்லிணக்கம் மற்றும் சிறுவர்களின் முழுமையான வளர்ச்சிக்காக. “கனவிலிருந்து இலக்கை நோக்கி” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த சிறுவர் தின கொண்டாட்டம் சிறுவர்களின் மனங்களில் நம்பிக்கையின் ஒளியையும் அமைதியின் பாதையையும் நிலைப்படுத்தியுள்ளது..















0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post