வாழ்வின் ஆதாரம் இயற்கை



 இயற்கையைப் பாதுகாத்து, மனிதர்களும் ஏனைய உயிரினங்களும் பாதுகாப்பாக வாழ வழிவகுக்கும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகும். இது காலநிலை மாற்றம், காற்று, நீர் மற்றும் மண்ணின் மாசுபாடு, வன அழிப்பு, பிளாஸ்டிக் பயன்பாடு போன்றவற்றைத் தடுக்கும் முயற்சிகளைக் கொண்டது.


இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டாலும், அதனுடன் அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் பாதிப்பு மிக மோசமானதாக உள்ளது. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் வாயுக்களால் காற்று மாசடைகிறது. ஆறுகள், குளங்கள், கடல்களில் கழிவுநீர் கலப்பதால் நீர் மாசுபடுகிறது. மரங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுவதால்  வனவிலங்குகளின் வாழிடம் அழிகிறது, தொலைபேசி பாவனையினால் பல குருவி இனங்கள் இன்று காணாமல் போயுள்ளன. பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணை மற்றும் கடலினையும் கடல்வாழ் உயிரினங்களையும் பாதிக்கின்றன.


 எம் கண்முன்னே இயற்கை தாய் துயிலுரியப்படுகிறாள். இருப்பினும் ஆங்காங்கே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் பல தன்னார்வ நிறுவனங்களினாலும் பசுமை விரும்பிகளினாலும் மேற்கொள்ளப்படுகிறது. அதனடிப்படையில் இயற்கையைப் பாதுகாக்க சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் ஏற்பாடுகளின் சிறு பங்களிப்பே இந்த விழிப்புணர்வு கட்டுரை.


ஒரு சிலரின் பங்களிப்புக்களால் மாத்திரம் மாற்றம் வந்துவிடாது. நம் ஒவ்வொருவரும் எங்களால் முடிந்தவரை இயற்கையைப் பாதுகாக்க செயற்பட முன்வர வேண்டும்.

 காற்றின் தூய்மையை பேணுவதற்காகவும் வெப்பநிலையை சீராக பேணுவதற்கும் இயற்கை சூழலை பாதுகாப்பதற்கும் முக்கிய வழியாக அமைவது மரம் வளர்ப்பதாகும்.


மேலும்  மீளமறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, துணி பைகளைப் பயன்படுத்தல்,  வீணாக நீர் திறந்துவைப்பதை தவிர்த்து, மழைநீர் சேகரிப்பு போன்ற முறைகளை அமல்படுத்தல்,  பழைய காகிதங்கள், போத்தல்கள் கள், உலோக பொருட்களை மறுசுழற்சி செய்தல், என எங்களால் முடிந்த சிறிய கைங்கரியங்களை எம்மை பாதுகாத்து வாழ வைக்கும் இயற்கைக்காக நாம் செய்ய வேண்டியது அவசியமாகும். 


நாம் ஒவ்வொருவரும் எமது சிறிய முயற்சிகளால் இயற்கையை பாதுகாக்க முடியும். இது எதிர்கால சந்ததிக்காக நாம் கொடுக்கும்  பெரிய பரிசாக இருக்கும்.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம் கடமை மட்டுமல்ல, நம் வாழ்வின் ஆதாரமாகவும் இருக்கிறது. "பசுமை பாதுகாப்பே வாழ்க்கை பாதுகாப்பு" என்பதைக் கருத்தில் கொண்டு இயற்கையை நேசிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும்.


அ. வேதிகா 

மாவட்ட இணைப்பாளர்,

சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம்

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post